Friday, September 8, 2017

NEET - சில புரிதல்கள்




அனைவருக்கும் புரிய வேண்டும், நிறைய பேருக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் technical jargons, details, statistical data முதலியவற்றை இந்தக் கட்டுரையில் தவிர்க்கிறேன். உங்கள் பிள்ளைகள் மருத்துவப் படிப்பில் சேர விரும்பினால் இந்தக் கட்டுரையை அவர்களுக்குக் காண்பியுங்கள்.


முதலில்…


அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்ததிற்குரியது. துருதிர்ஷ்டமானது. அவருக்கு என் அஞ்சலி. அவர் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.


இந்த வருடம் தமிழகத்திற்கு NEET தேர்வு மூலம் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை நடந்திருக்கக் கூடாது. பிளஸ் டூ மதிப்பெண்கள் மூலம் மட்டுமே சேர்க்கை நடந்திருக்க வேண்டும். ஏனென்றால், நீட் தேர்வில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். State board வழி படித்த தமிழக மாணவர்களுக்கு பெரும்பாலான கேள்விகளில் தலையும் புரியாது, வாலும் புரியாது.


***


ஆனால், MBBS/BDS சேர்க்கைக்கு ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வு அவசியம் வேண்டும் என்று இந்த கட்டுரையில் வாதாடப் போகிறேன். முழுவதும் படிக்கவும். இதில் ஒரு வரியைக்கூட நீங்கள் ஏற்காமல் போகலாம். மாற்றுக் கருத்தையும் கொஞ்சம் கேளுங்கள்.


1984-க்கு முன் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை எப்படி நடைபெற்றது? பள்ளி இறுதி ஆண்டில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவன் MLA மூலமாகவோ அமைச்சர் மூலமாகவோ சிபாரிசு பெற்று மருத்துவப் படிப்பிற்கான நேர்முகத்தேர்வில் (interview) கலந்துகொண்டு, admission பெறுவான். இதில் ஜாதி, பணம் உள்ளிட்ட அனைத்தும் விளையாடும்.


வேலூர் CMC-யில் சேர வேண்டுமானால், மேலே சொன்னவற்றுடன் மதம் மாறவும் சொல்வார்கள். (அன்றும் இன்றும்.) (ஐந்து வருடங்கள் முன் என் சீனியருக்கு MD படிப்பிற்காக மதம் மாற சொன்னார்கள். அவர் மறுத்துவிட்டார்.)


1984-இல் TNPCEE (Tamil Nadu Professional Courses Entrance Examination) அறிமுகப்படுத்தப் பட்டது. அதாவது மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான பொதுவான, ஒற்றை (single) நுழைவுத்தேர்வு. Single Window Counselling (ஒற்றைச் சாளர கலந்தாய்வு) அறிமுகப்படுத்தப் பட்டது. (நான் counselling போகும்போதுதான் சாளரம் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன். யார் இப்படி மோசமாக மொழிபெயர்த்தார்கள் என்று தெரியவில்லை.)


1984-க்கு பிறகு மேலே சொன்ன சிபாரிசு உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இல்லாமல், மாணவனின் மதிப்பெண் மூலம் மட்டுமே மருத்துவ சேர்க்கை நடைபெற்றது.


OC (Open Category/Open competition), BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பு), MBC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு), DC (Denotified Communities), SC (ஆதிதிராவிடர்), ST (பழங்குடியினர்) என ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு quota தமிழகத்தில் உண்டு. அகில இந்தியத் தேர்வுகளில் BC, MBC, DC இந்த மூன்றும் OBC - Other Backward Communities - என்ற பிரிவில் வரும். வசதியானோருக்கு creamy layer என்ற ஒரு விஷயம் அகில இந்தியத் தேர்வுகளில் கடைப்பிடிக்கப்படும். தமிழகத் தேர்வுகளில் creamy layer கிடையாது. உங்கள் ஜாதிச் சான்றிதழை ஒன்பதாவது படிக்கும்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அலைய வேண்டியிருக்கும். கலந்தாய்வில் (counselling) மதிப்பெண் சான்றிதழுடன் ஜாதிச் சான்றிதழின் அசலையும் (original) காண்பிக்க வேண்டும். தமிழகத்தில் Open Category-க்கு 31 சதவீதமும் அகில இந்திய அளவில் 50 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Cut off மதிப்பெண்கள் என்றால் என்ன? பிளஸ் டூ-வில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), Biology (உயிரியல்) மதிப்பெண்களைக் கொண்டு cut off கணக்கிடப் படும். அதாவது, மொத்த cut off 300 (2005 வரை). இதில் உயிரியல் மதிப்பெண்ணை இரண்டாக வகுக்க வேண்டும். உதரணமாக 200-க்கு 198 என்றால் 198/2 = 99.


இயற்பியல் மற்றும் வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி நான்கால் வகுக்க வேண்டும். உதாரணமாக (199 + 200)/4 = 99.75

உயிரியலில் இரண்டு மதிப்பெண் போனால், cut off-இல் ஒரு மதிப்பெண் போய்விடும். வேதியியல்/இயற்பியலில் நான்கு மதிப்பெண் போனால், cut off-இல் ஒரு மதிப்பெண் போய்விடும்


TNPCEE-யில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 100. ஒரு கேள்விக்கு a,b,c,d என்று நான்கு விடைகள் இருக்கும். மாணவன் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். (NEET-உம் இதே போல்தான்.)


TNPCEE-யில் மாணவன் 100-க்கு 97.32 எடுக்கிறான் என வைத்துக்கொண்டால், மாணவனின் cut off (99 + 99.75 + 97.32) = 296.07


2005-ஆம் ஆண்டில் ஒரு BC மாணவன் இந்த cut off பெற்றிருந்தால் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலோ கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியிலோ இடம் கிடைத்திருக்கும்.


TNPCEE-யில் கேள்விகள் சுலபமாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், கொஞ்சம் யோசித்து பதில் சொல்ல வேண்டியிருக்கும். தொடர்பயிற்சியின் மூலம் TNPCEE அல்லது NEET என எந்த ஒரு நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற முடியும்.


இந்த நுழைவுத் தேர்வுகளில் (NEET/TNPCEE) தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவரும் மருத்துவப் படிப்பிற்கு தகுதியானவர்களா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் மருத்துவக்கல்லூரியில், நீங்கள் பள்ளியில் படித்த அனைத்தையும் மறந்து புதிதாகப் படிக்க வேண்டும் (unlearn and relearn). பிளஸ் டூ-வில் மாநில முதலிடம் பிடித்த மாணவன் மருத்துவக் கல்லூரியில் சோபிக்காமல் போகலாம். பள்ளிப் படிப்பிற்கும் மருத்துவப் படிப்பிற்கும் சம்பந்தம் கிடையாது.


ஆனால், நுழைவுத் தேர்வு மூலம் தகுதி இல்லாதவர்களை இனம்காண முடியும். Cut off 300-க்கு 280 மேல் வாங்கியவன் மருத்துவக்கல்லூரியில் தாக்குப் பிடித்துவிடுவான். 230 வாங்கியவன் தாக்குப்பிடிப்பது கஷ்டம். பெரும்பாலும் தமிழறிஞர் வாரிசு quota-வில் வருபவர்கள் தாக்குப் பிடிக்க சிரமப்படுவார்கள். இதில் சிலர் விதிவிலக்காக மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்குவதும் உண்டு. (சரி, யார் தமிழறிஞர்? காளிமுத்துவா, நாஞ்சில் நாடனா? மேலும் தெரிந்துகொள்ள பதினைந்து ஆண்டுகள் முந்தைய செய்தித்தாள்களைப் படிக்கவும்!)


SC மாணவருக்கும் OC/BC/MBC மாணவருக்கும் cut off-இல் பெரிய வித்தியாசம் இருக்காது. அரை மதிப்பெண், ஒன்றிரண்டு மதிப்பெண்கள் வித்தியாசம் மட்டுமே இருக்கும். மருத்துவக் கல்லூரியில் SC மாணவர் சோபிக்க மாட்டார் என்பதெல்லாம் பொய்.


யார் சிரமப்படுவார்கள் என்றால் தமிழ்வழி (Tamil Medium) படித்த மாணவர்கள் முதல் ஆறு மாதங்கள் சிரமப்படுவார்கள். அதன்பின் LIFCO/Repidex உதவியுடன் கொஞ்சம் தேறிவிடுவார்கள். நான் படித்த ஸ்டான்லியில் முதல் மூன்று மாதங்கள் தமிழ்வழி மாணவர்களுக்கு, ஆசிரியர்களும் தமிழ்வழி படித்த சீனியர் மாணவர்களும் மாலை நேர சிறப்பு வகுப்பு எடுத்தார்கள். (நன்றி: Prof. Dr மைதிலி பாஸ்கரன், சீனியர் மாணவர் Dr முத்துக்குமார்).


மருத்துவப் படிப்பையே தமிழ்வழியில் படித்தால் என்ன? அதற்கான முயற்சிகளையும் Prof. Dr சுதா சேஷையனும் மன நல மருத்துவர் Prof. Dr திருநாவுக்கரசுவும் மேற்கொண்டார்கள். இன்னும் கனவு மெய்ப்படவில்லை.


***


Improvement என்ற திட்டம் முன்னர் இருந்தது. உதாரணமாக பிளஸ் டூ-வில் இயற்பியலில் மதிப்பெண் கம்மி என்றால், அடுத்த வருடம் இயற்பியல் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி முன்னை விட அதிக மதிப்பெண் வாங்க முயற்சிக்கலாம். (கூடவே TNPCEE-ஐயும் இரண்டாம் முறை எழுத வேண்டும்.) இரண்டாம் முறை எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.


2002-இல் (என்று நினைக்கிறேன்) அரசு ஒரு சட்ட திருத்தும் கொண்டுவந்தது. அதன்படி, Improvement எழுதும் மாணவர் ஒரு பாடத்திற்கு மட்டும் Improvement எழுத முடியாது. ஆறு பாடங்களையும் (Tamil, English, Physics, Chemistry, Biology, Maths), கூடவே TNPCEE-ஐயும் திரும்ப எழுத வேண்டும் என உத்தரவிட்டது.


2006-இல் திமுக அரசு (ராமதாஸின் நிர்பந்தத்தினால்) TNPCEE-ஐ நீக்கியது; முதல் முறை பிளஸ் டூ எழுதும் மாணவர்களின் நிர்பந்தத்தினால் improvement திட்டத்தையும் நீக்கிவிட்டது. (ராமதாஸின் நிர்பந்தத்தினால் கைவிடப்பட்ட மற்றொரு நல்ல திட்டம் - திருமழிசை துணை நகரத் திட்டம். திருமழிசை போன்று இரண்டு மூன்று துணை நகரங்கள் உருவாக்கியிருந்தால், 2015 டிசம்பர் சென்னை வெள்ளம் இவ்வளவு கோரமாக இருந்திருக்காது. )


ஏன் முதல் முறை பிளஸ் டூ எழுதும் மாணவர்கள் improvement திட்டத்தை எதிர்த்தனர்? ஏனென்றால், மருத்துவக் கல்லூரியில் நுழைபவர்களில் ஒரு வருடத்தில் 75 - 80 சதவீதம் பேர் improvement மாணவர்களாகவே இருந்தனர்.


சரி, ஒரு மாணவன் ஏன் improvement செய்ய நேர்கிறது? பிளஸ் டூ-வில் அடித்துபிடித்து, மனப்பாடம் செய்து 200-க்கு 200 வாங்கிவிடலாம். TNPCEE கொஞ்சம் கஷ்டம். ஏற்கனவே சொன்னதுபோல் கொஞ்சம் பயிற்சி வேண்டும். நான் படித்த பள்ளியிலும், மெட்ராஸில் இருந்து வாரம் ஒரு முறை ஒவ்வொரு பாடத்திற்கும் பிரத்யேகமாக ஒரு ஆசிரியரை அழைத்து வந்து TNPCEE பயிற்சி (coaching) கொடுத்தார்கள். நன்றாகத்தான் நடத்தினார்கள். ஆனால், அந்த வருடம் ஒருவர்கூட எங்கள் பள்ளியில் இருந்து மருத்துவம் சேரவில்லை.


நான் 2003-இல் (மொத்த cut off) 300-க்கு 290 வாங்கினேன். ஒரு வீணாய்ப்போன தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் இருந்தது; சேரவில்லை. பிளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண். 200-க்கு 197. TNPCEE-யில் 93.5 என்று நினைக்கிறன். வருத்தமாகத்தான் இருந்தது. இப்பொழுதுபோல் அப்பொழுது இலக்கியமும் படித்ததில்லை. நன்றாக ஊர் சுற்றினேன், K டிவி பார்த்தேன், சில சமயம் சும்மா இருந்தேன்.


Result வந்தது மே மாதம். ஆகஸ்ட் மாதம்தான் ராசிபுரத்தில் improvement சேர்ந்தேன். என்னுடைய அறை நண்பர்களில் ஒருவன் cut off 280. அவனும் நானும் full improvement படித்தோம் (plus two + TNPCEE). மற்ற இரண்டு பேர் பிளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்கள் - 200க்கு 199.5. அவர்கள் only entrance படித்தார்கள்.


நான், only entrance-இல் சேர்ந்து TNPCEE-யில் 100-க்கு 97 எடுத்தால்கூட seat கிடைக்காமல் போகலாம். என்னுடைய பிளஸ் டூ மதிப்பெண் 197 + TNPCEE-யில் 97 சேர்த்தால் 294. மதில் மேல் பூனை. 2004-இல் 294.5 எடுத்த BC மாணவனுக்கு கடைசிக் கல்லூரி கிடைத்தது (அப்பொழுது, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி). அதற்குக் கீழ் போனால், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில், வருடம் ஒன்றரை லட்சம் கட்டிப் படிக்க வேண்டியிருக்கும்.


Only Entrance-இல் சேர்ந்த என் நண்பர்கள் TNPCEE-இல் 96 எடுத்தால்கூட அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும். (அவர்கள் இருவருக்கும் இடம் கிடைத்தது.)


Improvement-இல் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டும்தான் வகுப்புகள் நடக்கும். பகல் முழுவதும் அறையில் தூங்கிக்கொண்டோ, எப்பொழுதாவது படித்துக்கொண்டோ இருப்பேன்/இருப்போம்; சினிமாவுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சேலத்துக்கோ நாமக்கல்லுக்கோ போவோம். (இப்பொழுது ராசிபுரத்திலும் புதிய படங்களைத் திரையிடுகிறார்கள்.) கணிதப் பரிட்சைக்கு நான்கு நாட்கள் விடுமுறை. ராசிபுரம் பாரதி திரையரங்கில் விஜய் நடித்த ‘திருமலை’ பார்த்தேன். (விஜய் அந்தப் படத்தில்தான் முதன்முறையாக மீசையை trim செய்து திரையில் தோன்ற ஆரம்பித்தார். இன்றுவரை அதே கெட்டப். ஆனால், தோற்றப் பொலிவு கூடிவிட்டது.) நண்பன் ஒருவன் அந்த ஒரு வருடம் மட்டும் நூறு படங்கள் பார்த்தான். செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவன் பிளஸ் டூ-வில் என்னுடைய மதிப்பெண். ஆனால், only entrance படித்தான். முழு improvement (theory + entrance) படித்திருந்தால் MMC-யில் சேர்ந்திருப்பான்.


நூறு படங்கள் பார்த்தவனால் எப்படி seat வாங்க முடிந்தது? திரும்பத் திரும்ப படிப்பதால், திரும்பத் திரும்ப TNPCEE model தேர்வுகள் எழுதுவதால் பயிற்சி கிடைத்துவிடும். சூட்சமம் புலனாகும். ஒத்த நோக்கமுள்ள நண்பர்கள் கூட இருப்பதால் ஒரு தெளிவு கிடைக்கும். நானெல்லாம் ஏதோ ஒரு  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று இருந்தேன். ‘நூறு படங்கள்' நண்பன்தான் படித்தால் MMC-யில்தான் படிக்க வேண்டும் என்று தீர்க்கமாகக் கூறுவான். MMC-க்கு முயற்சி செய்தேன். ஸ்டான்லி கிடைத்தது. ஏதோவொரு மருத்துவக் கல்லூரி என்று நினைத்திருந்தால் seat கிடைக்காமல் போயிருக்கலாம்.


சரி, improvement-இலும் seat கிடைக்காமல் போயிருந்தால்? இன்னொரு வருடம் (double) improvement செய்திருப்பேன். என் வகுப்பில் double improvement செய்தவர் ஐந்து பேர்; triple improvement ஒருவர்.


அப்படியும் கிடைக்கவில்லை என்றால் B.Sc., Agri படித்து  IAS முயற்சி செய்திருப்பேன். (எனக்கு பொறியியலில் சேர ஆர்வம் இல்லை.) இல்லையெனில் கால்நடை மருத்துவம் சேர்ந்திருப்பேன். (வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மெஸ்ஸில் தினமும் அசைவம் கிடைக்கும். தக்காளி சாதத்துக்குக்கூட extra-வாக chicken போடுவார்கள்.) (ஸ்டான்லி மெஸ், butter chicken-உக்கும் ‘Chicken 72’-வுக்கும் பிரசித்தம்.)


***


2004-இல் admission சமயத்தில் improvement-க்கு எதிராக முதல் முறை பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சிலர் கேஸ் போட்டனர். Improvement மாணவர்கள் சார்பாக (இப்பொழுது எல்லோரும் திட்டும்) நளினி சிதம்பரம்தான் வாதாடி, ஜெயித்துக்கொடுத்தார். (Improvement என்பது ‘Right to education’ என்ற fundamental rights-இன் கீழ் வருகிறது என்ற வாதம் நீதிமன்றத்தை ஒத்துகொள்ளச் செய்தது.)


***


1984 முதல் 2005 வரை இருபது வருடங்கள் TNPCEE அமுலில் இருந்த போது, கிராமப்புற, ஏழை, நடுத்தர, பணக்கார மாணவர்கள் என கலவையாக மாணவர்கள் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் இருப்பர். எனது வகுப்பில் அரசுப்பள்ளியில் இருந்து பத்து பேர் இருந்தனர். கிராமப்புற மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். (எனக்கு முந்தைய ஐந்து batch, பிந்தைய ஐந்து batch மாணவர்களை கவனத்தில்கொண்டுதான் இங்கு எல்லா விஷயங்களும் சொல்கிறேன்.)
ஏற்கனவே சொன்னதுபோல், சிலர் எந்த coaching centre-க்கும் போகாமல் பழைய கேள்வித்தாள்களைக் கொண்டு, சுயமாக குறிப்புக்கள் எடுத்து TNPCEE-க்கு படித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள்.


TNPCEE-யோ, NEET-ட்டோ மேலே சொன்னதுபோல் கொஞ்சம் பயிற்சியும் முனைப்பும் ஊக்கமும் இருந்தால் போதும்; தேறிவிடலாம்.


பொதுவாக விடுதி மாணவர்கள்தான் bike வைத்திருப்பார்கள். என் வகுப்பில் bike வைத்திருந்தவர்கள் மாணவர்கள் பதினைந்து அல்லது இருபது, மாணவிகள் ஐந்தோ ஆறோ. அவ்வளவுதான். மொத்த மாணவர்கள் 150.


TNPCEE ஐ நீக்கிய பிறகு 2008 batch-இல் bike வைத்திருந்தவர்கள் 60 சதவீதம். மூன்று நான்கு பேர் கார் கூட வைத்திருந்தனர். 2015 batch-இல் bike வைத்திருப்போர் 90 சதவீதம். (மருத்துவக் கல்லூரிகளில், சேர்ந்த வருடத்தை batch வருடமாக சொல்வது வழக்கம்.)


இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? TNPCEE ஐ நீக்கிய பிறகு வெறும் பிளஸ் டூ மதிப்பெண்ணை மட்டும் கணக்கில்கொண்டு கடந்த பத்து ஆண்டுகளாக admission நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சொன்னதுபோல் பிளஸ் டூ-வில் 200-க்கு 200 எடுப்பது சுலபம். TNPCEE-க்கு கொஞ்சம் மூளையை உபயோகிக்க வேண்டும். TNPCEE-ஐ எடுத்த பிறகு நாமக்கல் Green Park-க்கும் குறிஞ்சிக்கும் மக்கள் அலை அலையாய் சென்றனர். அங்கு, ரெண்டு வருடங்கள் முட்டி மோதி, மனப்பாடம் செய்து 200-க்கு 200 வாங்கிவிடுவார்கள். அங்கு ஒரு வருடம் பள்ளிக் கட்டணம் (2015 வாக்கில்) ஒன்றரை லட்சம்.


(Improvement கட்டணம் 2003-இல் வருடம் இருபதாயிரம். இயலாதவர்கள் ஏற்கனவே சொன்னதுபோல் வீட்டிலிருந்து படித்து, seat வாங்கினர்.)


அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் வெகு சிலர்தான் இப்பொழுது அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயில்கிறார்கள்.


சரி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி quota கொண்டு வந்தால் என்ன? அப்படி ஒரு திட்டம் முன்னர் இருந்தது. அதையும் நம் மக்கள் corrupt செய்துவிட்டனர். என் வகுப்பில் பணக்கார மாணவர்கள் சிலர் அருகில் உள்ள கிராமப் பள்ளிகளில் அந்த quota-வுக்காக 2001-இல் பிளஸ் ஒன் சேர்ந்தார்கள். சில மாதங்களிலேயே அந்தத் திட்டம் நீக்கப்பட்டது. அவர்கள் பிளஸ் டூ-வுக்கு ராசிபுரம் SRV, அந்தியூர் Ideal முதலிவற்றை அணுகி, இடம் மறுக்கப்பட்டனர்; பின் Ideal-இல் improvement செய்து, ஸ்டான்லியில் நுழைந்தனர்.


NEET இப்பொழுதுதான் கொண்டுவரப்பட்டதா என்றால், அதுவும் இல்லை. AIPMPDT/AIPMT (All India Pre-medical Pre-Dental Test) என்ற தேர்வு அப்போது அமுலில் இருந்தது. அதன் இன்னொரு வடிவம்தான் NEET.  நானும் பிளஸ் டூ முடித்த பின்னும் Improvement முடித்த பின்னும் AIPMT எழுதியிருக்கிறேன். தலையும் புரியாது, வாலும் புரியாது. இப்பொழுது போல், NEET மட்டும் இருந்து, சீட் கிடைக்காமல் போயிருந்தால் முன்னமே சொன்னதுபோல் வேறு படிப்புகளில் சேர்ந்திருப்பேன்.


***


என் வகுப்பில் CBSE மாணவர்கள் 15%. 22 பேர். எனக்கு முந்தைய ஐந்து வருட மாணவர்களிலும் எனக்குப் பிந்தைய ஐந்து வருட மாணவர்களிலும் அவர்கள் State Board மாணவர்களைப் போல்தான் இருந்தனர். 2005 batch-இல் மட்டும் CBSE/AIPMT மூலம் வந்த ஒரு மாணவர் சிறந்து விளங்கினார். படிக்கும் பையன் எங்கிருந்தாலும், எந்தப் பாடத் திட்டத்தில் (State Borad/CBSE) படித்திருந்தாலும் ஜொலிப்பான்.


***


இந்த வருடம் NEET தேர்வினால், பழைய மாணவர்கள் நிறைய பேர் நுழைந்துவிட்டனர் என்ற செய்தியைப் பார்த்தேன். இது ஒன்றும் புதிதல்ல. TNPCEE-ஐ நீக்கிய பிறகு, 2007-ஆம் ஆண்டு இதேபோல் பழைய மாணவர்கள் நிறைய பேர் நுழைந்தார்கள். ஃபிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்தவர்கள், பொறியியல் முடித்தவர்கள், கைக்குழந்தையுடன் பெண்கள் என நிறைய பேர் அந்த வருடம் சேர்ந்தனர். அவர்கள் பிளஸ் டூ படிக்கும்போது நல்ல மதிப்பெண்கள் பெற்று, நுழைவுத்தேர்வில் கோட்டை விட்டவர்கள்.


***


சமீபத்தில் தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கேஸ் போட்டார்களே? வருடாவருடம் கேஸ் போடுவார்கள். வருடாவருடம் உச்ச நீதி மன்றமும் அவர்களுக்கு seat ஒதுக்கச் சொல்லி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும். முதல் சுற்று counselling-இல் (case-உக்காக) சில seat-களை மறைத்துவிடுவார்கள். மொத்தம் ஐம்பதோ அறுபதோ இடங்கள். பின்னர், தீர்ப்பு வந்ததும் OC மாணவர்களுக்கு தனி counselling மூலம் இடங்களை நிரப்புவார்கள்.


முக்கியமான விஷயம், NEET மூலம் இட ஒதுக்கீட்டுக்கு எந்த பங்கமும் வராது.


***


TNPCEE-ஐ நீக்கிய பிறகு கடந்த பத்து ஆண்டுகள் என்ன நடந்தது? 200க்கு 200 cut off மதிப்பெண்ணில் பத்து பேர் இருப்பார்கள். 199.75-இல் இருபது பேர். 199.5-இல் ஐம்பது பேர். 199.25-இல் இருநூறு பேர். 199-இல் முன்னூறு பேர். 198.5-இல் முன்னூறு பேர் இருப்பார்கள். (இதில் கூட குறைய இருக்கலாம். த்வனியை மட்டும் புரிந்துகொள்ளவும்.)


என்ன ஆகிறது என்றால், OC மாணவனுக்கு 198.25-இலேயே அரசுக் கல்லூரி இடங்கள் முடிந்துவிடும். BC மாணவனுக்கு 197.75-இல் அரசுக் கல்லூரி இடங்கள் முடிந்துவிடும். அதே மதிப்பெண் வாங்கிய மாணவனுக்கு திருவாரூரிலோ தர்மபுரியிலோ இடம் கிடைத்திருக்கும். இவனுக்கு இடம் கிடைக்காது.


ஒரே மதிப்பெண்ணில் நூறு மாணவர்கள் இருந்தால், எப்படி தேர்வு செய்வார்கள். நீங்கள் பத்திரிகைகளில் படித்திருக்கலாம். மே முதல் வாரத்தில் random number allot செய்வார்கள். கணினி மூலம் இது நடக்கும். என்னுடைய random number 13467 என்றால், உங்களுடைய random number 18327 என்று இருக்கும். நாம் இருவரும் ஒரே மதிப்பெண் என்றால், உயிரியலில் யார் அதிக மதிப்பெண் என்று பார்ப்பார்கள். இருவருமே 200க்கு 200 என்றால், வேதியியல், இயற்பியல் என்று பார்ப்பார்கள். அதுவும் ஒத்துப்போனால், வயதில் யார் மூத்தவர் என்று பார்ப்பார்கள். அதுவும் ஒரே மாதிரி இருந்தால், யாருக்கு random number அதிகம் என்று பார்ப்பார்கள். என்னை விட உங்கள் random number அதிகம் என்பதால், நீங்கள் தேனியில் மருத்துவம் சேர்ந்துவிடுவீர்கள். வசதியிருந்தால் நான்  தனியாரில் சேர்வேன். இல்லையெனில் எனக்கு seat கிடைக்காமல், வேறு படிப்புகளில் சேர வேண்டும். TNPCEE இருந்த போது இந்த கேலிக்கூத்துகள்  எதுவும் நடக்கவில்லை. ஒரே மதிப்பெண்ணில் இருவர் வருவதே அபூர்வம். என்னுடைய cut off 296.68 என்றால், ரேங்க் பட்டியலில் எனக்கு முந்தைய மாணவன் 296.72 வாங்கியிருப்பான்.


இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க கல்வித்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. வருடா வருடம் பிளஸ் டூ-வில் ஏதோவொரு பாடத்திற்கு கடினமான கேள்வித்தாள்களைத் தயாரிப்பார்கள். பெரும்பாலும் இயற்பியல். சில வருடங்கள் வேதியியலோ உயிரியலோ. அப்படியும், ஒரே மதிப்பெண்ணில் இருநூறு பேர் இடம்பிடிப்பது நிற்கவில்லை. நல்ல மதிப்பெண் எடுத்தும் seat கிடைக்காமல் திரும்புபவர் நிறைய பேர்.


வேறு வழிகள் உண்டா? இருநூறு மதிப்பெண்களுமே ஒரு மதிப்பெண் கேள்விகளாக மாற்றிவிடலாம் என்றால், அதற்கு பதில், நுழைவுத்தேர்வையே எழுதிவிடலாம்.


2013-இல் NEET கொண்டுவந்தபோது, தமிழக அரசு அதிலிருந்து விலக்கு வாங்கிவிட்டது. சிலர் பிளஸ் டூ முடிந்தவுடன் இரண்டு மாதங்கள் coaching class போனார்கள். அந்த இரண்டு மாத coaching-இல், ஆயிரம் பேர் சேர்ந்தால், பத்து பேர் seat வாங்குவர்.


NEET என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வருடமும் தமிழக State Board மாணவர்கள் எப்படியும் தமிழக அரசு விலக்கு வாங்கிவிடும் என்று நம்பினார்கள். நானே அப்படித்தான் நம்பினேன். துருதிருஷ்டவசமாக ஜெயலிலதா 2016 டிசம்பரில் இறந்தார். ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதல்வாராக இருந்திருந்தால் கண்டிப்பாக, குறைந்தபட்சம் இந்த வருடத்திற்காவது தமிழகத்தில் NEET மூலம் admission நடந்திருக்காது.


இனி என்ன செய்ய வேண்டும்? இந்த விஷயத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். கோர்ட்டில் ஜெயித்தால், அடுத்த வருஷம் விலக்கு கிடைக்கலாம். ஆனால், நமக்காக இதை முன்னெடுக்க நல்ல அரசு வேண்டும்.


அடுத்த வருடம் (2018) State Board பிளஸ் ஒன் மாணவர்களுக்கு NEET/CBSE-ஐ மாதிரியாக வைத்து பாடத்திட்டம் அமுலுக்கு வர இருக்கிறது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி. ஆயிரம் உதயச்சந்திரன்கள் இருந்தாலும், அவர்கள் சொல்வதை அமைச்சர் கேட்கவேண்டுமல்லவா!


இந்த மாணவர்கள் பிளஸ் டூ எழுதும்போது (2020) இவர்களுக்கு NEET தேர்வுக் கேள்விகள் பரிச்சயமாகி இருக்க வேண்டும். அப்பொழுது கேஸ் போட்டால், தோற்றுவிடுவோம்.


எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏழை மாணவி நல்ல மதிப்பெண் இருந்தும் (190-க்கு மேல் cut off என ஞாபகம்) மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை என குறை தீர்க்கும் நாளில் (எல்லோரும் திட்டிக்கொண்டிருந்த) அப்போதைய மத்திய அமைச்சர் அழகிரியிடம் மனு கொடுத்தார். உடனடியாக அழகிரி அந்த மாணவிக்கு மணக்குள விநாயகர் கல்லூரியில் (என நினைக்கிறன்) seat ஏற்பாடு செய்தார். (பத்திரிகைகளில் இது செய்தியாக வந்தது.)


அனிதா விஷயத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளில் அவருக்கு seat வாங்கிக் கொடுத்திருக்கலாம். அல்லது அவருக்கு அறிவுரை கூறி ஒரு வருடம் NEET coaching சேர்த்திருக்க வேண்டும். (ஒரு கல்வியாளர் அவரை B.Sc. Agri படிக்க அறிவுறுத்தினார் என அறிகிறேன்.)


வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகள் பற்றி சில விஷயங்கள். நீங்கள் MBBS படிக்காவிட்டால்கூட பரவாயில்லை. ஃபிலிப்பைன்சிலோ, சீனாவிலோ, ரஷ்யாவிலோ, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலோ உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடாதீர்கள். திரும்ப வரும்போது ஒன்றும் தெரியாமல் வருவார்கள்.


மருத்துவக்கல்லூரிகளில் நீங்கள் theory-ஐ கரைத்துக் குடிக்கலாம். வெளியில் வரும்போது நல்ல clinical acumen-உடன் வர வேண்டும். அதுதான் முக்கியம்.


அடுத்த வருடம் (2018) பிளஸ் டூ எழுதும் மாணவர்களுக்கு, இப்போதிருந்தே NEET-இல் கேள்விகள் எவ்வாறு கேட்கப்படும் என அறிந்துகொள்ளுங்கள். அதற்கான பயிற்சி புத்தகங்களை வாங்கிக்கொள்ளுங்கள். பிளஸ் டூ முடித்தவுடன் coaching centre-இலோ தனியாக வீட்டிலிருந்தோ இரண்டு மாதங்கள் படியுங்கள். Seat கிடைக்கவில்லையா, இன்னும் ஒரு வருடம் NEET-க்கு மட்டும் படியுங்கள்.முனைப்பும் பயிற்சியும் இருந்தால் தேறிவிடலாம். நீங்கள் OC வகுப்பை சேர்ந்தவர் என்றால், இன்னும் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளுங்கள்.


ஆட்சியாளர்களையோ கல்வியாளர்களையோ நம்ப வேண்டாம். சமச்சீர் திட்டத்தின் போது (2011) இந்த கல்வியாளர்கள் எப்படி இழுத்தடித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த வருடம் செப்டெம்பர் ஆகியும்கூட பிரச்னை முடியவில்லை. அப்பொழுது விஜயகாந்த் சொன்ன உதாரணம் ஞாபகத்திற்கு வருகிறது: "குதிரைதான் கேட்டோம்; கழுதை கிடைத்திருக்கிறது. குதிரை கிடைக்கும் வரை கழுதையில்தான் பயணம் செய்தாக வேண்டும்."


***


இந்த வருடம் NEET-இலிருந்து விலக்கு கிடைக்குமா? 90% கிடைக்க வாய்ப்பில்லை. NEET மூலம் நுழைந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால், அதன் பிறகு என்ன சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், NEET மூலம் நுழைந்த மாணவர்கள் அவர்கள் சார்பில் case போடுவார்கள். அவர்கள் admission ஆகிவிட்டால், அவர்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். செப்டெம்பர் 30-க்குள் மருத்துவக்கல்லூரி admission நிறைவு பெற வேண்டும் என்பது உச்ச நீதி மன்ற உத்தரவு. அதற்கும் மேல் தள்ளிபோனால், இந்த மாணவர்கள் ஆகஸ்ட் 2018-இல் முதல் வருடத் தேர்வை எழுத முடியாது; 2019 ஃபெப்ருவரியில்தான் எழுத முடியும். 1998--இல் (என நினைக்கிறன்) பெருந்துறை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இப்படித்தான் நேர்ந்தது.

***


யாராக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். உங்கள் மரணம் ஆட்சியாளர்கள்/decision makers மனங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.


தற்கொலை செய்யப் போகிறவர்கள் எந்த முறையில் சாக வேண்டும் என தெளிவான திட்டம் வைத்திருப்பார்கள் - தூக்குக்கயிறா, மருந்தா என்று. அதைப் பற்றி போகிற போக்கில் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் சொல்லவும் செய்வார்கள். அதை லேசில் விட்டுவிடாமல், உடனடியாக மனநல மருத்தவரிடம் அழைத்து செல்லுங்கள்.


ஒருவர் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்? அவமானத்தைத் தாங்க முடியமால் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி, வேலை போய்விட்டது, பணம் இல்லை, எதுவாக இருந்தாலும் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும். (நன்றி: Prof. Dr திருநாவுக்கரசு).


அவமானத்தை எப்படித் தாங்கிக் கொள்வது? புத்தகம் படியுங்கள், நம்பிக்கையின் ஒளிக்கீற்று தெரியும். நல்ல சினிமா பாருங்கள்; நல்ல இசை கேளுங்கள்; நண்பர்களுடன் பேசுங்கள்; பயணம் செய்யுங்கள். உங்கள் comfort zone-இல் இருந்து வெளியே வாருங்கள். (நன்றி: சாரு நிவேதிதா)


அப்படியும் தற்கொலை எண்ணம் போகவில்லையா, மன நல மருத்துவரைப் பாருங்கள் அல்லது தற்கொலைத் தடுப்பு மையத்தை அணுகுங்கள். தனியார்: 044 - 24640050; அரசு - 104. (104-க்கு ஃபோன் பண்ணினால் அனைத்து உடல் உபாதைகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பார்கள். தற்கொலை எண்ணத்தைப் போக்க தனித் துறையும் உண்டு.)